Friday, February 29, 2008

கனா காணும் காலங்கள்
- ஆம், நிச்சயமாக நம் பள்ளி நாட்கள் தாம்!

மிகுந்த சுவையுடன் அசை போடும் நினைவுகள்.

குடும்பம் என்ற வட்டத்திற்கு அப்பாற்பட்டுக் கிடைத்த முதல் அன்பு: நண்பர்கள்.
அவர்களுடன் விளைந்த சிறு மோதல்கள், அதனைத் தொடர்ந்த அன்புப் பரிமாற்றங்கள், அரும்புக் காதல்கள் என்று பல நினைவில் நீங்கா எண்ணங்கள்; இலட்சியங்களை சாதிக்கும் குணங்கள்,நம்மை அறியாமலேயே விதையிடப்பட்ட பருவம்: பள்ளிப் பருவம்.

இத்தகைய அருமையான பள்ளிப் பருவத்தை மையமாகக் கொண்ட "கனா காணும் காலங்கள்" என்னும் விஜய் டிவி நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று.

அத்தியாயம் 267-ல், நண்பர்களுக்கிடையே நிகழும் மோதல்களினால் ஏற்படும் வலியை அற்புதமாக ஒரு கவிதையின் மூலம் சொல்லி இருந்தார்கள்; இதோ உங்களுக்காக்:

நண்பா!

நீ பறவை, நான் மரம்.
என் கிளையை காயப்படுத்திவிட்டு உயர எழும் உன் கால்கள்;
உயர உயர நீ பறப்பாய், காயப்பட்ட நானோ கண்ணீருடன்;
எல்லைகளைத் தொட்டுக் களைத்து நீ திரும்பி வருவாய் இளைப்பாற
என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்.


பள்ளி பருவத்தில் நமக்கு நம்மீது இருந்த நம்பிக்கையை நினைவூட்டுவதாக அமைந்தது மற்றொன்று:

நான் மலையில் கல்லுடைப்பதாக எண்ணி
அணைவரும் என்னை அலட்சியமாக பார்த்தார்கள்
அவர்களுக்குத் தெரியவில்லை நான் மலையை
உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று.

Wednesday, February 06, 2008